
டாடா குழும சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி குறைந்தது
உ லகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல், துறை தொடர்பான சவால்கள் காரணமாக, டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, கடந்த 11 மாதங்களில் 8.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளது. குறிப்பாக, முக்கிய பங்குகளான டி.சி.எஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டிரென்ட் பங்குகள் கண்ட சரிவு, ஒட்டுமொத்த குழுமத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சத்தில் இருந்த போது 34.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, ஆக.5ம் தேதி நிலவரப்படி, 24 சதவீதம் சரிவை கண்டு, 26.31 லட்சம் கோடி ரூபாயானது.
ரீகால் ரிசோர்சஸ் பங்கு விலை 96 - -102 ரூபாயாக நிர்ணயம்
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு, மக்காச்சோள மாவு உள்பட பல்வேறு உணவு மூலப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள ரீகால் ரிசோர்சஸ் நிறுவனம், 306 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியிடுகிறது.
முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 96 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 210 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. பங்கு ஒன்றின் விலை 96 - -102 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் 12 முதல் 14ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.