கப்பல் கட்டுமான வளர்ச்சிக்கு 8 இடங்களில் மெகா மையங்கள் தமிழகத்திலும் அமைக்கப்படுகிறது
கப்பல் கட்டுமான வளர்ச்சிக்கு 8 இடங்களில் மெகா மையங்கள் தமிழகத்திலும் அமைக்கப்படுகிறது
ADDED : ஜூலை 08, 2025 07:16 AM

புதுடில்லி : தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், கப்பல் கட்டுமானத்துக்கான எட்டு மிகப்பெரிய கிளஸ்டர் எனும் தொகுப்பு மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, கப்பல் போக்குவரத்து துறை செயலர் டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்க, எட்டு இடங்களில் மிகப்பெரிய கிளஸ்டர்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றுக்கு தேவையான இடங்களும், அனுமதியும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.
இதில் ஐந்து கிளஸ்டர்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. மீதமுள்ள மூன்று கிளஸ்டர்களை பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள கப்பல் கட்டுமான வசதிகள் விரிவுபடுத்தப்படும்.
புதிய கிளஸ்டர்களை பொறுத்தவரை தமிழகம், ஆந்திரா, ஒடிசா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் உருவாக்கப்படும். இங்கு கப்பல் கட்டுமானம், உபகரண உற்பத்தி, விற்பனையாளர்கள், காப்பீடு சேவைகள் மற்றும் கப்பல் குத்தகை உள்ளிட்டவை ஒருசேர இயங்கும்.
இதுதவிர, குஜராத்தின் வடினார், காண்ட்லா துறைமுகங்களிலும், கேரளாவின் கொச்சி துறைமுகத்திலும் கப்பல் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் பங்கு தற்போது 1 சதவீதத்துக்கும் குறைவு
வரும் 2047ம் ஆண்டுக்குள் உலகளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேற இலக்கு