குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.100 கோடி கடன் பெற வாய்ப்பு
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.100 கோடி கடன் பெற வாய்ப்பு
ADDED : ஏப் 07, 2025 01:31 AM

திருப்பூர்:குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீடு மற்றும் வருவாய் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், வட்டி சலுகையுடன், 100 கோடி ரூபாய் வரை பிணையில்லா கடன் பெற்று, தொழிலை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளதாக 'லகு உத்யோக் பாரதி' தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அடிப்படை வரன்முறை வகைப்பாடு, உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கூடுதலான நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., திட்டத்தில் பயன்பெற முடியும். போட்டித்தன்மையை சமாளிக்கவும், தொழில்நுட்பம், இயந்திரம் மற்றும் மனிதவளத்தில் கூடுதல் முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மத்திய அரசின் 'உதயம்' இணையதளத்தில் பதிவு செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, பட்ஜெட்டில் அறிவித்தபடி, 100 கோடி ரூபாய் வரை பிணையில்லா கடன் பெறவும் வாய்ப்புள்ளது. கொள்முதலிலும் முன்னுரிமை கிடைக்கும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட சலுகைகளையும் பெறலாம்.வேலைவாய்ப்பையும் கூடுதலாக உருவாக்க முடியும். குறு, சிறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் உள்ள திருப்பூர், இதனால் அதிக பலன்களைப் பெற இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை, முதலீடு மற்றும் வருவாய் வரம்பு அடிப்படையிலான வகைப்பாட்டை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இது, இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

