சென்னையில் ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை ராணுவ இணை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சென்னையில் ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை ராணுவ இணை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
UPDATED : ஆக 23, 2025 12:56 AM
ADDED : ஆக 23, 2025 12:53 AM

சென்னை:'ட்ரோன்கள்' உற்பத்தி செய்யும் 'கருடா ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட் அப்' நிறுவனம், சென்னை தாழம்பூரில் அமைக்கும், புதிய ராணுவ 'ட்ரோன்' உற்பத்தி ஆலைக்கு, ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேத் அடிக்கல் நாட்டினார்.
![]() |
நிகழ்வில், ஐந்து விதமான, ராணுவ தாக்குதல் ட்ரோன்களை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, ராணுவத்தின் 'ஜம்மு அண்டு காஷ்மீர் ரைபிள்ஸ்' படைப் பிரிவின் 13வது பட்டாலியனுடன் இணைந்து, ராணுவ ட்ரோன் ஆய்வகத்தை அமைக்க உள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
![]() |
இது குறித்து, 'கருடா ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்னீஸ்வர் கூறியதாவது:
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள, ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை, 76 ஏக்கரில் அமைய உள்ளது. நீர், காற்று மற்றும் நிலத்தில் பயணிக்கும் தாக்குதல் ட்ரோன்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய, இந்த ஆலை பயன்படும்.
விவசாயம், சுரங்கம், தொழில்துறை, ராணுவம் என, பல்வேறு துறைகளுக்கு ட்ரோன்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதுவரை, 4,000க்கும் அதிகமான ட்ரோன்களை, உலக அளவில் விற்பனை செய்துள்ளோம்.
உற்பத்தியில், 70 சதவீதம் உள்நாட்டு மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில், 19க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்று இருந்தாலும், இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ், பிரான்சின் தாலிஸ், அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் உள்ளிட்ட பல ராணுவ உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தார்.