ADDED : பிப் 21, 2024 12:49 AM

மில்களை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு, மாநில பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழக ஜவுளித்துறையினரிடம் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.
ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
மற்ற மாநில மில்கள், உயரிய தொழில் நுட்பத்தைக் கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துள்ளன. இதனால், அதிக ஏற்றுமதி வாய்ப்புள்ள, கோர்ஸ் வகை நுால் ஏற்றுமதியில், தமிழகம் ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக, கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் செப்., வரை, குஜராத் 2,621 கோடி ரூபாய்; பஞ்சாப் 1,452 கோடி ரூபாய்; மத்திய பிரதேசம் 1,391 கோடி ரூபாய் மதிப்பிலான மேற்கண்ட நுால் வகைகளை ஏற்றுமதி செய்துள்ளன. இதில், தமிழகம் 684 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, உற்பத்திச் செலவில் இருக்கும் வித்தியாசம் தான்.
அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி, நுால் தயாரிக்கும்போது, கிலோவுக்கு 10 முதல் 15 ரூபாய் வரை, உற்பத்தி செலவு குறைகிறது. இந்நிலையில், மில்களை நவீனமயமாக்க வட்டிச்சலுகைக்கு, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழக நுாற்பாலைத்துறைக்கு பெரிதும் பயனளிக்கும்.
இதனால், தரமான நுாலைத் தயாரித்து, உள்நாட்டு தேவைகளுக்கு வழங்குவதால், திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் வியாபார வாய்ப்பும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.
-நமது சிறப்பு நிருபர்-

