6.60லிருந்து 8 சதவீதமாக கணிப்பை உயர்த்தியது 'மூடீஸ்'
6.60லிருந்து 8 சதவீதமாக கணிப்பை உயர்த்தியது 'மூடீஸ்'
ADDED : மார் 08, 2024 01:42 AM

புதுடில்லி:நிதி சேவைகள் நிறுவனமான 'மூடிஸ்', நடப்பு நிதியாண்டுக்கான, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பை, முன்பிருந்த 6.60 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், வேகமாக வளரும் ஜி20 பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி அதிகமாக இருந்த காரணத்தால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்தை ஒட்டி இருக்கக்கூடும் என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மூடிஸ் நிறுவனமும் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மூடிஸ் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில், 8 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், ஜி20 நாடுகளிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அரசின் மூலதன செலவினம் மற்றும் வலுவான உள்நாட்டு தேவை ஆகியவையே, இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும், சீனாவிலிருந்து வெளியேறி வரும் நிறுவனங்களின் முடிவால், வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் இந்தியா பெரிதளவில் பயனடைய உள்ளது.
கடந்த நிதியாண்டில், 6.70 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், நடப்பு நிதியாண்டில், 5.50 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் மேலும் குறையும் நிலையில், அது பணக் கொள்கையில் மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
ஜி20 நாடுகளிலேயே, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்கும்

