மியூச்சுவல் பண்டு முதலீட்டை கவர தபால்காரர்களுக்கு 'ஆம்பி' பயிற்சி மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் திட்டம்
மியூச்சுவல் பண்டு முதலீட்டை கவர தபால்காரர்களுக்கு 'ஆம்பி' பயிற்சி மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் திட்டம்
ADDED : ஆக 21, 2025 11:39 PM

புதுடில்லி:நாடு முழுதும் மியூச்சுவல் பண்டு முதலீட்டை அதிகரிக்க, தபால் துறையுடன் 'ஆம்பி' எனப்படும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் கைகோர்க்கிறது.
நேரடி பங்கு முதலீட்டை விட, மியூச்சுவல் பண்டு திட்டங்களை கூடுதல் பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். எனினும், முதலீடு செய்வதற்கான வழிகளை பலர் அறியாமல் உள்ளனர். எனவே, தபால்காரர்களை பிரதிநிதிகளாக பயன்படுத்த, ஆம்பி திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு, மியூச்சுவல் பண்டு வினியோகம் தொடர்பான பயிற்சி அளிக்க அது திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, பீஹார், ஆந்திரா, ஒடிஷா, மேகாலயா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், இந்தாண்டு இறுதிக்குள் வினியோகஸ்தர்கள் இருப்பதை உறுதி செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, ஆம்பி தலைமை செயல் அதிகாரி வெங்கட் நாகேஸ்வர் சலாசனி தெரிவித்துள்ளதாவது:
சோதனை முயற்சியாக, நான்கு மாநிலங்களில் புதிய முயற்சி செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தாண்டுக்குள், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 பயிற்சி பெற்ற வினி யோகஸ்தர்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், அடுத்த ஆண்டில், இதை 20 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம்.
தனிநபர்கள் சிலர் சந்தித்து வரும் கே.ஒய்.சி., பிரச்னைகளுக்கு, தபால் துறையுடன் இணைந்து தீர்வு காணப்பட உள்ளது. இதன் வாயிலாக, இந்திய தபால் துறை செயல்பாடுகள் லாபகரமான மையங்களாக மாற உள்ளன.
இது வெற்றி பெறும்பட்சத்தில், தபால்காரர்கள், வங்கி வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் போன்று, சேமிப்பு திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மியூச்சுவல் பண்டு முதலீட்டு திட்டங்களை விரிவுப்படுத்தும் பணியையும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.