'ரேட்டிங்' அடிப்படையில் இனி ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி
'ரேட்டிங்' அடிப்படையில் இனி ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி
ADDED : டிச 08, 2024 12:59 AM

புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், நாடு முழுதும், நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததாரர்களின் செயல்திறனை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்து உள்ளதாவது:
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில், 70க்கும் குறைவான மதிப்பெண் பெறும்பட்சத்தில், அவர்கள் செயல்திறன் அற்றவராக அறிவிக்கப்படுவர்.
மீண்டும் தங்களது மதிப்பெண்ணை உயர்த்தும் வரை, புதிய நெடுஞ்சாலை திட்டங்களில் பங்கேற்க தகுதியற்றவராக அறிவிக்கப்படுவர். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை, தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் என, இரண்டு நிலைகளில் மதிப்பீடு புதுப்பிக்கப்படும்.
மதிப்பீட்டு முறையானது, பி.சி.ஐ., எனப்படும் தளநிலைக் குறியீடு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 'ஒன் ஆப்' செயலியில் பதிவாகும் குறைபாடுகளை சரி செய்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இந்த செயலியில், 95க்கும் மேற்பட்ட குறைபாடுகளை, டிஜிட்டல் முறையில்
கண்காணிக்க முடியும்.
மதிப்பெண் வழங்குவதில், பி.சி.ஐ.,க்கு 80 சதவீதமும்; ஒன் ஆப் செயலிக்கு 20 சதவீதமும் 'வெயிட்டேஜ்' வழங்கப்படும்.
தளநிலைக் குறியீடு என்பது சாலை தரத்தின் உறுதித்தன்மை, குழிகள், விரிசல், பள்ளம், ஆழம், ஒட்டு வேலை ஆகிய ஆறு அளவீடுகள் அடிப்படையில், ஆய்வு வாகனங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கணக்கிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.