ADDED : பிப் 18, 2025 09:36 AM

புதுடில்லி:
கடந்தாண்டு ஏப்ரல் - நவம்பர் மாதங்களுக்கு இடையே, நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சோயா பீன் எண்ணெய்யின் அளவு, 14 மடங்கு அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்துக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தக தளர்வுகளை, அங்கு ஆலை அமைத்துள்ள இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே, இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் - நவம்பர் காலத்தில் நாட்டின் சோயா பீன் எண்ணெய்யின் மொத்த இறக்குமதி மதிப்பு 19 சதவீதம் அதிகரித்து 26,100 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2023ல் இது 21,750 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியா - நேபாளம் இடையே கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி, நேபாளத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நம் நாட்டில் வரி வசூலிக்கப்படுவதில்லை.
அதே நேரத்தில் பிற நாடுகளிலிருந்து நம்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கு 35 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, சீனா உள்ளிட்ட பிற நாடுகள் தங்களது தயாரிப்புகளை நேபாளம் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது.