வரி தாக்கல் சரிபார்ப்பு நிலவரம் அறிந்துகொள்ள புதிய வசதி
வரி தாக்கல் சரிபார்ப்பு நிலவரம் அறிந்துகொள்ள புதிய வசதி
ADDED : அக் 17, 2025 01:37 AM

புதுடில்லி: வரி தாக்கல் செய்தவுடன் அது சரிபார்க்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில், வருமான வரித்துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வோர் ரியல் டைம் எனப்படும், நிகழ் நேரத்தில் தகவல் தெரிந்து கொள்ளவும், அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வருமான வரி தாக்கல் செய்யும் போர்ட்டலுக்கு சென்று, கணக்கு தாக்கல் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். சரிபார்க்கும் அலுவலர் அல்லது வருமான வரி ஆணையர், கணக்கு தாக்கல் ஆவணங்களை பதிவிறக்கம் செய்தது மற்றும் பார்வையிட்டது குறித்து அறிந்து கொள்ளலாம்.
இது தங்களது கணக்குகளின் நிலவரம் குறித்த வரி செலுத்துவோரின் கவலைகளை தீர்க்க வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேவையற்ற தாமதம் அல்லது வரி செலுத்துவோரின் பதிலை கண்டுகொள்ளாமல் உத்தரவு பிறப்பிக்கப்படும்பட்சத்தில், அலுவலர் பார்வையிட்ட பதிவு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
கணக்கு தணிக்கை குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட நபர்களால் மட்டுமே பார்க்கமுடியும் என்பதால், இது பாதுகாப்பான நடைமுறை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.