UPDATED : அக் 17, 2025 01:47 AM
ADDED : அக் 17, 2025 01:36 AM

திருப்பூர்: கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 5.80 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
![]() |
இதுகுறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:
நடப்பு 2025- 26 நிதியாண்டில், ஏப்., - முதல் செப்., வரையிலான ஆறு மாதங்களில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நிலையான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் ஆயத்த ஆடை துறையின் வலிமை மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
![]() |
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 65 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இது, 2024 - 25 நிதியாண்டின் இதே காலத்தை விட, 3.40 சதவீதம் அதிகம்; 2023 - 24 நிதியாண்டின் இதே ஆறு மாத காலத்தைவிட, 12.20 சதவீதம் அதிகம்.
கடந்த 2024 செப்., மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு செப்., மாத ஏற்றுமதி, 10.10 சதவீதம் சரிந்துள்ளது; ஆனாலும், 2023ம் ஆண்டின் இதே மாதத்தைவிட, 5.40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நிலையான மற்றும் ஒரே சீரான வளர்ச்சி நிலையோடு பயணித்துவருகிறது. இது, நமது தொழில் துறையின் வலுவான மற்றும் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்கூட, இந்திய ஏற்றுமதியாளர்கள், தயாரிப்பு பொருளில் தரம் மற்றும் வினியோகத்தில் குறிப்பிடத்தக்க தகவலமைப்பு, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, சந்தை விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கான ஏ.இ.பி.சி.,ன் முயற்சிகள், வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதில் முக்கிய பங்குவகிக்கிறது.
சந்தை தேவை அதிகரிப்பு, மேம்பட்ட நிலைத்தன்மை முயற்சிகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களால், நடப்பு நிதியாண்டின் வரும் மாதங்களில் ஏற்றுமதி வர்த்தகம் மேலும் சிறப்பான வளர்ச்சி நிலையை அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த பொருட்கள் ஏற்றுமதி 4.45 சதவீத வளர்ச்சி கடந்த நிதியாண்டின் ஆறு மாதங்களில், 33.63 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடந்தது நடப்பு நிதியாண்டின் இதே ஆறு மாதங்களில், 35.13 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது