தமிழக அரசுக்கு 1,937 பஸ்கள் அசோக் லேலாண்டுக்கு ஆர்டர்
தமிழக அரசுக்கு 1,937 பஸ்கள் அசோக் லேலாண்டுக்கு ஆர்டர்
ADDED : அக் 17, 2025 01:35 AM

புதுடில்லி: அசோக் லேலாண்டு நிறுவனத்திடமிருந்து 1,937 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டி.என்.எஸ்.டி.யு., எனும் தமிழ்நாடு மாநில போக்குவரத்து நிறுவனம் இதற்கான ஆர்டரை வழங்கிஉள்ளது.
இதுவரை அசோக் லேலாண்டு நிறுவனம் மாநில போக்குவரத்து நிறுவனத்துக்கு 21,000 பேருந்துகளை வழங்கிஉள்ளது.
இந்த ஆர்டரின்படி, நகர்ப்புறம், புறநகர் மற்றும் எஸ்.இ.டி.சி., சேவைகளுக்கென பிரத்யேகமாக பேருந்துகள் வடிவமைக்கப்பட உள்ளதாக அசோக் லேலாண்டு தெரிவித்து உள்ளது.
மத்திய அரசின் சமீபத்திய பாதுகாப்பு மற்றும் செயல்பாடு விதிமுறைகளுக்கு ஏற்ப, அதிநவீன அடித்தள கட்டமைப்பு தளத்துடன் இந்த பேருந்துகள் கட்டமைக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆர்டர் குறித்து பேசிய அசோக் லேலாண்டின் தேசிய விற்பனை பிரிவு தலைவர் மாதவி தேஷ்முக், “தமிழகம் எப்போதுமே எங்களுக்கு முக்கிய சந்தையாக விளங்கி வருகிறது.
“நிறுவனத்தின் தொழில் நுட்பம் மற்றும் செயல்பாடுகளின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இந்த ஆர்டர் உறுதிப்படுத்துகிறது,” என தெரிவித்தார்.
இந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலாண்டு, பி.எஸ். 6 தரத்தில், 1701 தாழ்தள டீசல் பேருந்துகளை இந்த மாதம் துவங்கி, மார்ச் 2026 வரையும், 236 செமி தாழ்தள பேருந்துகளை ஜனவரி 2027 வரையும் டெலிவரி செய்யவுள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தையில் அசோக் லேலாண்டு நிறுவனத்தின் பங்கு விலை ஒரு சதவீதம் உயர்ந்து 137.05 ரூபாயாக இருந்தது.