ADDED : அக் 17, 2025 01:23 AM

புதுடில்லி: மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஓலா நிறுவனம், வீடுகளில் ஏசி,பிரிஜ் முதல் மின் மோட்டார் வரை பயன்படுத்தும் வகையில், சக்திவாய்ந்த பேட்டரி ஆற்றல் சேமிப்பு தொழிலில் இறங்கியுள்ளது.
பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு என்பது மின்சாரத்தை பெரிய அளவில் பேட்டரிகளில் சேமித்து, தேவைப்படும்போது அதை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம்.
இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் சி.இ.ஓ., பாவிஷ் அகர்வால் தெரிவித்ததாவது:
இன்று தொலைதுார பகுதிகளுக்கு மின்சார தீர்வு களை அளிக்கும், ஓலா சக்தியை அறிமுகப்படுத்தி உள்ளோம். 1.50 முதல் 9.10 கிலோவாட் திறன் கொண்ட நான்கு வகையான பேட்டரி அமைப்புகள் முறையே, 29,999 ரூபாயில் இருந்து 1,59,999 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தாண்டு, ஜனவரி இரண்டாம் வாரம் முதல் 999 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஓலா சக்தி என்பது இந்தியர்கள் ஆற்றலை பயன்படுத்தும், கட்டுப்படுத்தும் மற்றும் அணுகும் விதத்தை மாற்றியமைக்கும் ஒரு கையடக்க மின் சேமிப்புத் தீர்வு ஆகும்.
ஓலா இந்த சந்தையில் நுழைவதனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள், அதன் ஆண்டு தேவை 5 கிகா வாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கிறது. இதற்கு, ஏற்கனவே உள்ள அதன் ஜிகாபாக்டரி, விற்பனை நிலையங்களை புதிய பேட்டரி ஆற்றல் சேமிப்பு சந்தைக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது.
இதனால், இதற்குப் பெரிய அளவில் கூடுதல் மூலதனச் செலவு இருக்காது.
இவ்வாறு தெரிவித்தார்.
இது நவீன இந்தியாவின் வீடுகள், பண்ணைகள் மற்றும் கடைகளுக்கான பேட்டரியாக வடிவமைப்பு செயலி வாயிலாக பேட்டரியின் நிலையை கண்காணிக்கலாம்; முழு சார்ஜ் செய்தால், ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தலாம்.