ADDED : நவ 01, 2024 07:27 AM

புதுடில்லி : டில்லியில், எந்தவொரு துணை பதிவாளர் அலுவலகத்திலும் சொத்துக்களை பதிவு செய்வதற்கான திட்டத்துக்கு முதல்வர் ஆதிஷி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி நடக்கிறது. இங்கு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சொத்துகளை, அந்த பகுதிக்குட்பட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்யும் நடைமுறை இருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எந்தவொரு துணை பதிவாளர் அலுவலகத்திலும், குறிப்பிட்ட சொத்துகளை பதிவு செய்யும், 'எங்கும் பதிவு' என்ற கொள்கை திட்டத்துக்கு முதல்வர் ஆதிஷி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், ஊழலைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் 'எங்கும் பதிவு' திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, டில்லியில் உள்ள அனைத்து துணைப் பதிவாளர்களும் மாநிலம் முழுதும் அதிகார வரம்பைக் கொண்ட கூட்டு துணை பதிவாளர்களாக செயல்படுவர். சொத்து உரிமையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப, டில்லியின் 22 துணைப் பதிவாளர் அலுவலகங்களில் ஏதேனும் ஒரு அலுவலகத்தில், ஆன்லைனில் அப்பாயின்மெனட் வாங்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

