ADDED : நவ 29, 2024 10:24 PM

புதுடில்லி:நாட்டின் பொருளாதார நிலவரத்தை பின்தொடர, மாற்று தகவல் ஆதாரங்களாக ஆன்லைன் வணிக விலை, டேட்டா பயன்பாடு, சுற்றுலா செலவழிப்பு ஆகியவற்றையும் பயன்படுத்த, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா செலவழிப்பு குறித்த ஆய்வு மட்டுமின்றி, வரும் ஜனவரியில் தேசிய குடும்ப பயண செலவிடல் தொடர்பான ஆய்வையும் நடத்த, புள்ளியியல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதோடு, 2026 பிப்ரவரியில், சில்லரை விலை குறியீடுக்கான புதிய வரிசையையும் வெளியிட உள்ளது.
இதில், வழக்கமாக கணக்கில் கொள்ளப்படும் நுகர்வோர் செலவீடுகள் மட்டுமின்றி, ஆன்லைன் வணிகத்தில் பொருட்களின் விலை, இணையதள விளையாட்டுகள், மொபைல் டேட்டா, புளூடூத் இயர்போன், ஆன்லைன் வீடியோ சந்தா மற்றும் மொபைல்போன் துணைக் கருவிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பொருட்களின் நுகர்வு மற்றும் விலை அடிப்படையிலான தகவல்களைக் கொண்டு, பணவீக்க குறியீடை நிர்ணயிக்கும் வழக்கத்துக்கு மாற்றாக, இந்த வழிகளில் புதிய புள்ளிவிபர ஆதாரங்களை திரட்ட உள்ளதாக, டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் புள்ளியியல் அமைச்சக செயலர் சவுரவ் கார்க் தெரிவித்தார்.
பொருளாதார புள்ளி விபரங்களைப் பெறுவதில், இரவில் எரியும் விளக்குகள் குறித்த செயற்கைக்கோள் தகவலையும் வைத்து பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தில் ஏற்படும் தாக்கம் ஆகிய விபரங்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

