ADDED : செப் 28, 2025 01:33 AM

சென்னை:சென்னையை ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கான, ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு மையமாக உருவாக்குவதற்காக, 'itsChenn.AI' என்ற இணையதளத்தை, தமிழக அரசின் 'வழிகாட்டி' நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதன் வாயிலாக, உலக முதலீட்டாளர்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தமிழகத்தில் விரைவாக வளர்ந்து வரும் ஏ.ஐ., தொழில் சூழலுக்கான வாய்ப்புகளை எளிதில் அணுகலாம்.
தொழில் துறையினருக்கு அரசு வெளியிட்டுள்ள கொள்கைகள், மானிய சலுகைகள் உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில், 248 உலகளாவிய திறன் மையங்கள், 17 டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையங்கள் உள்ளன. நாட்டிற்கு அதிக அளவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஐ.டி., பணியாளர்களை தமிழகம் வழங்குகிறது.
ஐ.ஐ.டி., மெட்ராஸ், அண்ணா பல்கலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏ.ஐ., ஆராய்ச்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, 20 லட்சம் பேருக்கு, ஏ.ஐ., தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே, ஏ.ஐ., தொடர்பான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு மையமாக சென்னையை உருவாக்க, அதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் விபரங்களை முதலீட்டாளர்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவை தெரிந்து கொள்வதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையை ஏ.ஐ., ஆராய்ச்சி, முதலீட்டு மையமாக்க, விபரங்களை அறிய 'itsChenn.AI'