வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்வு
வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்வு
ADDED : ஜன 25, 2024 12:45 AM

புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து, 7.78 கோடியாக உள்ளது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில், நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 7.78 கோடியாக இருந்தது. இது கடந்த 2013 - 14 நிதியாண்டில் இருந்த 3.80 கோடியுடன் ஒப்பிடுகையில், 104.91 சதவீதம் அதிகமாகும்.
இந்த காலகட்டத்தில் நிகர வரி வருவாயும் 160.52 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2013 - 14 நிதிஆண்டில் 6.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிகர வரி வருவாய், கடந்த நிதியாண்டில் 16.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 2014ம் நிதியாண்டில் 7.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி வருவாய், கடந்த 2023ம் நிதியாண்டில் 19.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம் வரிக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 5.62 சதவீதத்திலிருந்து 6.11 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வருவாயாக 18.23 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய, பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் தனிநபர் வரி மற்றும் கார்ப்பரேட் வரியும் அடங்கும்.
இது, கடந்த நிதியாண்டின் 16.61 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 9.75 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
வரிக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 5.62 சதவீதத்திலிருந்து 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது