பெட்ரோலில் எத்தனால் கலப்பு குருணை வழங்க ஒடிசா திட்டம்
பெட்ரோலில் எத்தனால் கலப்பு குருணை வழங்க ஒடிசா திட்டம்
ADDED : செப் 09, 2025 11:41 PM

புவனேஷ்வர்:பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு தேவையான எத்தனால் உற்பத்திக்கு, குருணையை வினியோகிக்க ஒடிசா அரசு திட்டமிட்டு வருகிறது. நெல்லை தவிடு நீக்கும்போது கிடைக்கும் அரிசி தான் நொய் அல்லது குருணை எனப்படுகிறது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மாநில அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, அதிகளவிலான விவசாயிகள் நெல் விதைப்பில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
அரசு, 100 கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 3,100 ரூபாயாக உயர்த்தியதைத் தொடர்ந்து, அதிகளவிலான விவசாயிகள் நெல் பயிரிடத் துவங்கியுள்ளனர். இதனால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பதிவு செய்துள்ள புதிய விவசாயிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக, கரீப் பருவ பயிர்கள் கொள்முதல் செய்யப்படும். அரிசி இருப்பு அதிகமாக உள்ளதால், குருணையை எத்தனால் உற்பத்திக்கு வினியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.