ஆர்.டி.ஐ., தகவலை வைத்து வசூல் தொழிற்சாலைகளை பாதுகாக்க அதிகாரிகள் பரிந்துரை
ஆர்.டி.ஐ., தகவலை வைத்து வசூல் தொழிற்சாலைகளை பாதுகாக்க அதிகாரிகள் பரிந்துரை
UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 10:36 PM

சென்னை: தொழிற்சாலைகளை குறிவைத்து, ஆர்.டி.ஐ., மனுக்களை அனுப்பி மிரட்டி பணம் வசூலிப்பதை தடுக்க, அரசுக்கு அதிகாரிகள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் இயங்கும் பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளில், காற்று – நீர் மாசு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக தலைமை செயலக தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவிற்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் ஏராளமான புகார்கள் வருகின்றன. சாயதொழிற்சாலைகள், தனியார் மருத்துவமனை கழிவுகள் உள்ளிட்டவை தொடர்பாக அதிக புகார்கள் அனுப்பப்படுகின்றன.
இதுபோன்று ஆர்.டி.ஐ., புகார் அளிப்பதற்கு கட்டணமாக ஒரு விண்ணப்பத்திற்கு 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதற்கான பதில் 30 நாட்களில் வழங்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட சில தனிநபர்கள் மற்றும் சங்கங்கள் வாயிலாகவே அதிகளவில் புகார்கள் அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஆர்.டி.ஐ., வாயிலாக தொழிற்சாலைகள், சிறு, குறு தொழிற்சாலைகள் தொடர்பாக பல்வேறு தகவல்களை பெறும் நபர்கள், சங்கங்கள், தொடர்புடைய நிர்வாகங்களை அழைத்து பேசுகின்றனர். சில இக்கட்டான நேரங்களில் தொழில் நிறுவன பிரதிநிதிகள் வாயிலாகவும் ஆர்.டி.ஐ., மனு அளித்தவர்களிடம் பேச்சு நடத்தப்படுகிறது.
அதுபோன்ற சந்திப்புகளில், லட்சக் கணக்கான ரூபாய் வரை மிரட்டி வசூல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகி யுள்ள நிலையில், தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆர்.டி.ஐ., மனுக்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதை பயன்படுத்தி சிலர் மிரட்டல் வசூலில் ஈடுபடுகின்றனர்.
‘தொழிற்சாலைகள், டெண்டர் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு சிக்கிம், அருணாசல பிரதேச மாநிலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
‘இதை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்’ என்றார்.
ஆர்.டி.ஐ., வாயிலாக தொழிற்சாலைகள் தொடர்பாக பல்வேறு தகவல்களை பெறும் நபர்கள், சங்கங்கள், லட்சக்கணக்கான ரூபாய் வரை மிரட்டி வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
