ருத்ராட்ச மாலை ஏற்றுமதி சுவிட்சர்லாந்தில் வாய்ப்பு
ருத்ராட்ச மாலை ஏற்றுமதி சுவிட்சர்லாந்தில் வாய்ப்பு
ADDED : செப் 28, 2025 11:07 PM

புதுடில்லி:இந்தியாவின் ருத்ராட்ச மாலைகள், இப்போது சுவிட்சர்லாந்திலும் பிரபலமாகி வருகிறது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் ருத்ராட்ச மாலைகளுக்கான ஒரு சிறிய சந்தையாக, இந்நாடு உருவெடுத்து வருகிறது.
இந்தியாவில் ஆன்மிகம் சார்ந்த பொருட்களில், ருத்ராட்சத்துக்கு என தனியாக ஓர் இடம் உள்ளது. உடல்நலம் மற்றும் மனதை அமைதிப் படுத்துவதற்கு இது மிகவும் துணைபுரிகிறது.
இதையடுத்து, சுவிட்சர்லாந்து மக்களும் இதனால் மிகவும் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். இங்கு கிட்டத்தட்ட 27,000 அதிகமான இந்தியர்களும் உள்ளனர். இந்தியர்கள் மற்றும் உள்நாட்டினரால் ருத்ராட்ச மாலைக்கான சந்தை விரிவடைந்து வருகிறது.
இங்கு உள்ள கடைகளில் ஒரு மாலை 50 சுவிஸ் பிராங்ஸ் அதாவது கிட்டத்தட்ட 4,650 ரூபாய் விலைக்கு விற்பனை ஆகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து அமலாகும் இந்தியா- - இ.எப்.டி.ஏ., வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக ருத்ராட்ச வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024- --25 நிதியாண்டில், இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, ருத்ராட்ச ஏற்றுமதி நடைபெற்று உள்ளது.
இந்தியாவின் ஹரித்வார், டெல்லி, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இருந்து ருத்ராட்சம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.