ADDED : அக் 30, 2024 08:39 PM

புதுடில்லி, அக்.31-
மொபைல்போனில் ஓ.டி.பி., அனுப்புவோரை அடையாளம் காண்பதை, தொலைபேசி நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கும் விதிமுறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை, டிராய் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இதனால், நவம்பர் 1ம் தேதி முதல் ஓ.டி.பி., வருவதற்கு தாமதம் ஏதும் ஏற்படாது.
மின்னணு பணப்பரிவர்த்தனைகள், விண்ணப்ப படிவ பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பலவற்றுக்கு, தொடர்புடையவரின் மொபைல்போனுக்கு, ஒருமுறை பதிவிடும் ரகசிய குறியீடு அனுப்புவது நடைமுறையில் உள்ளது. இந்த சேவை அளிக்கும் நிறுவனங்கள், தங்களது சுருக்க பெயர், டெம்ப்ளேட் ஆகியவற்றை மட்டுமே தொலைபேசி நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ளன.
இதனால், மொபைல் போனுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி., வாயிலாக, பணமோசடிகள் நடைபெறுவதாக அதிக புகார்கள் வருகின்றன.
இதைத் தவிர்க்கும் நோக்கில், ஓ.டி.பி., தொடர்பான கடுமையான விதிகளை, தொலைத்தொடர்பு கண்காணிப்பு அமைப்பான டிராய் அறிவித்துள்ளது.
ஓ.டி.பி., அனுப்பும் வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனங்களின் பெயர், டெம்ப்ளேட் மட்டுமின்றி, மீண்டும் அழைக்கக்கூடிய மொபைல்போன் எண்ணும் ஓ.டி.பி.யில் இடம்பெற வேண்டும்.
வரும் ஓ.டி.பி.,க்களை தொலைபேசி நிறுவனங்கள், தங்கள் தகவல் தொகுப்போடு பொருத்திப் பார்த்து, அடையாள முகவரி, திரும்ப அழைக்கும் தொலைபேசி எண் ஆகியவை இல்லாதவற்றை, நிராகரிக்க விதிமுறை வகை செய்கிறது.
இதை நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த, டிராய் உத்தரவிட்டிருந்த நிலையில், தொலைபேசி நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தன.
அதை ஏற்று காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் டிராய் நீட்டித்துள்ளது. இதையடுத்து, தொலைபேசி நிறுவனங்களின் சரிபார்ப்புக்காக ஓ.டி.பி., டெலிவரி தாமதமாகும் என்ற நிலை, தற்போதைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

