ADDED : பிப் 12, 2025 11:49 PM

புதுடில்லி:பாமாயில் இறக்குமதி, 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரியில் சரிந்துள்ளது. சோயா பீன் எண்ணெய் மலிவான விலையில் கிடைப்பதால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஜனவரியில் பாமாயில் இறக்குமதி 65 சதவீதம் சரிந்து, 2.75 லட்சம் டன்னாக இருந்தது என, எஸ்.இ.ஏ., எனும் சால்வென்ட் எக்ஸ்டிராக்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த மாதம் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 13 சதவீதம் குறைந்து, 10.49 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டு ஜனவரியில் 12 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேஷியாவில் கடந்த சில மாதங்களாக பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, பாமாயிலின் சந்தை பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில், தென் அமெரிக்க நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும் சோயா பீன் எண்ணெய், அதன் பங்கை கைப்பற்றி வருகிறது.
2024 ஜனவரியில் 1.89 லட்சம் டன்னாக இருந்த சோயா பீன் எண்ணெய் இறக்குமதி, நடப்பாண்டில் 4.44 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. பாமாயிலைப் பொறுத்தவரை ஆர்.பி.டி., கச்சா என இரண்டு வகை பாமாயில் இறக்குமதியுமே கடுமையாக சரிந்துள்ளது.