பேப்பர், பேப்பர் போர்டு இறக்குமதி ஏப்., - செப்., காலத்தில் 3சதவீதம் அதிகரிப்பு
பேப்பர், பேப்பர் போர்டு இறக்குமதி ஏப்., - செப்., காலத்தில் 3சதவீதம் அதிகரிப்பு
ADDED : நவ 21, 2024 02:12 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அதாவது ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களுக்கு இடையே, நாட்டின் பேப்பர் மற்றும் பேப்பர் போர்டுகளின் இறக்குமதி 3.50 சதவீதம் அதிகரித்துள்ளது என, ஐ.பி.எம்.ஏ., எனும் இந்திய பேப்பர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
இந்த காலத்தில் நாட்டின் மொத்த இறக்குமதி, 9.92 லட்சம் டன்னாக இருந்தது. சீனாவில் இருந்து இறக்குமதி 44 சதவீதம் அதிகரித்ததே, மொத்த இறக்குமதி அதிகரிக்க முக்கிய காரணமானது.
சீன இறக்குமதிகடந்த நிதியாண்டை பொறுத்தவரை, ஒட்டுமொத்த பேப்பர் மற்றும் பேப்பர் போர்டுகளின் இறக்குமதி 34 சதவீதம் அதிகரித்து, 19.30 லட்சம் டன்னாக இருந்தது.
இதுகுறித்து, ஐ.பி.எம்.ஏ., தெரிவித்துள்ளதாவது:உள்நாட்டிலேயே போதுமான தயாரிப்பு வசதிகள் உள்ளபோதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் சீன இறக்குமதி அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக, 2020, 2021ம் ஆண்டுகளில் சற்றே குறைந்திருந்த பேப்பர் இறக்குமதி, அதன் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, விற்பனை குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் உள்நாட்டு பேப்பர் உற்பத்தி தொழில் துறையினர், இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பைபர் பேப்பர் போர்டு உற்பத்தியாளர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.
பரிந்துரை
கடந்த 2020 - 21 நிதியாண்டுக்குப் பின், சீனா, சிலி, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகை பேப்பர் போர்டுகளின் அளவு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த, பேப்பர் மற்றும் பேப்பர் போர்டுகளுக்கான சுங்க வரியை, தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த, சமீபத்தில் நடந்த மத்திய நிதி அமைச்சகத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கேட்பு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.