மின்சார கார் விற்பனை சரிவு 'யு டர்ன்' அடித்த போர்ஷே
மின்சார கார் விற்பனை சரிவு 'யு டர்ன்' அடித்த போர்ஷே
ADDED : பிப் 16, 2025 10:43 PM

ஜெர்மனி:நடப்பு நிதியாண்டில் மின்சார கார்களால் 10 சதவீதம் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், ஜெர்மனியின் 'போர்ஷே' சொகுசு கார் நிறுவனம், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் இன்ஜின் தொழில்நுட்பத்தில் 7,543 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்த இழப்புக்கு, கார் விற்பனை மட்டும் அல்லாமல், மின்சார கார் கட்டமைப்பு மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்கள் மீது செய்யப்பட்ட முதலீடுகளும் காரணமாகி உள்ளது.
போர்ஷே நிறுவனம், 2020ம் ஆண்டில், அதன் முதல் மின்சார காரான 'டேகான் இ.வி.,' காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், போகப்போக இதன் தேவை குறைந்துவிட்டது.
அதேபோல், 2022ல் 'மக்கான் இ.வி.,' காரை அறிமுகப்படுத்தியது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 'பி.ஒய்.டி., ஷாவ்மி' உள்ளிட்ட சீன மின்சார கார் நிறுவனங்களின் போட்டி, அதிகரிக்கும் சொகுசு இன்ஜின் கார்களின் தேவை ஆகியவை, போர்ஷே நிறுவன மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இதற்கிடையே, மின்சார கார்கள் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால், வரும் 2029க்குள் ஜெர்மனியில் செயல்படும் தன் இரண்டு ஆலைகளில் பணிபுரியும் 1,900 பேரை பணிநீக்கம் செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

