ADDED : ஜன 24, 2026 02:23 AM

புதுடில்லி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரித்துள்ளதால், நாட்டின் தனியார் துறை வளர்ச்சி இம்மாதம் வேகம் எடுத்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், தனியார் துறை வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., 'பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., குறியீடு' இம்மாதம் 59.50 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த டிசம்பரில் 57.80 புள்ளிகளாக இருந்தது.
இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். உள்நாட்டு சந்தையில் தேவை அதிகரிப்பு மற்றும் வலுவான சந்தைப்படுத்தல் முயற்சிகளால் வர்த்தக நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.
ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

