இறக்குமதியில் எந்த நாட்டு தயாரிப்பு என்பதற்கான ஆதாரம் கட்டாயம்
இறக்குமதியில் எந்த நாட்டு தயாரிப்பு என்பதற்கான ஆதாரம் கட்டாயம்
ADDED : மார் 21, 2025 11:23 PM

புதுடில்லி; தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகளை பெறுவதற்கு, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எந்த நாட்டை சேர்ந்தது என்பதை, ஆதாரத்துடன் குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், சுங்க விதிகள் (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் சான்று விதிகள் நிர்வாகம்) 2020ல், பல்வேறு பொருட்களுக்கு சான்றிதழ் என்பதற்கு பதிலாக, ஆதாரத்துடன் கூடிய சான்றிதழ் என திருத்தி உள்ளது. இது மார்ச் 18 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். குறிப்பாக, சீனாவில் இருந்து மொபைல் போன், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை வியட்நாம், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக கொண்டு வந்து, போலியாக தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகளை பெற்று வருகின்றனர்.
இதனால் ஏற்படும் அதிகபட்ச வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த இந்த திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.சான்றிதழ் மட்டுமே போதுமானது என்ற நிலையில் இருந்து, இந்திய சுங்கத்துறை அதிகாரிகள், இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் ஆதாரங்களை கேட்க முடியும். இதனால், இறக்குமதியாளர்கள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.