உருவாகிறது ரேபிடோ - மேஜிக் பின் கூட்டணி சொமாட்டோ, ஸ்விக்கி வரிசையில் புதுவரவு
உருவாகிறது ரேபிடோ - மேஜிக் பின் கூட்டணி சொமாட்டோ, ஸ்விக்கி வரிசையில் புதுவரவு
ADDED : நவ 24, 2025 01:19 AM

புதுடில்லி: நாட்டின் உணவு டெலிவரி சந்தையில் சொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதனை எதிர்த்து ரேபிடோ, மேஜிக் பின் நிறுவனங்கள் கூட்டாகக் களம் இறங்குகின்றன.
நாட்டின் மூன்றாவது பெரிய உணவு டெலிவரி நிறுவனமான மேஜிக் பின், ரேபிடோவுக்குச் சொந்தமான ஓன்லி தளத்துடன் நாடு முழுதும் இயங்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஓன்லி, மேஜிக் பின்னின் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்யும்.
ரேபிடோ - மேஜிக் பின் இணைப்பு முழுதுமாக செயல்பாட்டுக்கு வந்த பின், மேஜின் பின் தொடர்பு வைத்துள்ள நாட்டின் 80,000க்கும் அதிகமான உணவகங்களிலிருந்து ரேபிடோவின் ஓன்லி உணவு டெலிவரி செய்யத் துவங்கும்.
அதேபோல, ரேபிடோவின் டெலிவரி வசதிகளை குறிப்பிட்ட பகுதிகளில் மேஜிக் பின் பயன்படுத்திக் கொள்ளும்.
இதுகுறித்து ரேபிடோ வின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
ரேபிடோ, நேரடியாக உணவகங்களைத் தன் பட்டியலில் தொடர்ந்து சேர்த்துவரும். சிறிய எண்ணிக்கையிலான உணவகங்களே மேஜிக் பின் போன்ற நிறுவனங்கள் வாயிலாக எங்களுடன் இணையும்.
மேலும் மேஜிக் பின் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட நகரங்களில் சரக்கு போக்குவரத்து சேவையை வழங்கிவருகிறோம். நம்பகமான, கட்டுப்படியாகக்கூடிய விலையில் வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக் கும் சேவைகளை வழங்கு வதே எங்கள் நோக்கம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம், ரேபிடோவில் தனக்கு உள்ள பங்குகள் குறித்து மறு பரிசீலனை செய்வதாக ஸ்விக்கி கூறியிருந்தது.
இதன்பின், செப்டம்பரில் ஸ்விக்கியின் இயக்குநர் குழு, ரேபிடோ சேவையை வழங்கிவரும் ராப்பன் டிரான்ஸ்போர்ட்டேஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்க ஒப்புதல் அளித்தது.
இந்த பங்குகளின் மதிப்பு 2,400 கோடி ரூபாய் ஆகும். ரேபிடோ, உணவு டெலிவரி துறையில் நுழைய இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து ஸ்விக்கி இம்முடிவை எடுத்தது.

