ADDED : மார் 19, 2024 10:45 PM

புதுடில்லி,:நடப்பு நிதியாண்டில், இம்மாதம் 15ம் தேதி வரையிலான காலத்தில், வருமான வரி நிலுவைத் தொகையில் 73,500 கோடி ரூபாயை வரித்துறை மீட்டுள்ளது. முந்தைய ஆண்டில் வசூலான 52,000 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது கணிசமான அதிகரிப்பாகும்.
நிலுவையில் உள்ள வரி நிலுவைத் தொகைகளின் வசூலை அதிகரிக்கும் நோக்குடன் கூடிய மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மொத்த தொகையில், கார்ப்பரேட் வருமான வரி பாக்கிகள் 56,000 கோடி ரூபாய், தனி நபர் வருமான வரி பாக்கி 16,500 கோடி ரூபாய் மற்றும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் 50 கோடி ரூபாய் உள்ளிட்டவை அடங்கும்.
சமீப ஆண்டுகளில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக, தனிநபர் வருமான வரி வசூலில் கணிசமான ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வருவாய்த் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ”இம்மாதம் 31ம் தேதிக்கு பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சலுகை வரி நீட்டிக்கப்படாது. நடப்பு நிதியாண்டில், போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், பொருளாதாரத்தின் அளவைக் கருத்தில் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள 22 சதவீதம் வரிவிகிதம் நியாயமானது” என்று தெரிவித்தார்.

