புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி டென்மார்க் நிறுவனம் ஒப்பந்தம்
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி டென்மார்க் நிறுவனம் ஒப்பந்தம்
ADDED : டிச 09, 2025 01:30 AM

சென்னை: தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம், திறன் மேம்பாடு, புதிதாக உருவாகும் மின்சார தொழில்நுட்பம், ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம், டென்மார்க் நாட்டின், 'டேனிஷ் எனர்ஜி ஏஜன்சி' இடையே, நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்தியாவுக்கான டென்மார்க் துாதர் ராஸ்மாஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்ஷன் ஆகியோர், ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, கடலுக்குள் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கான கொள்கை வடிவமைப்பில், டென்மார்க் நிபுணத்துவத்தை, பசுமை எரிசக்தி கழகம் பயன்படுத்திக் கொள்ளும்.
மேலும், ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்கைகள் உருவாக்கம், பழைய காற்றாலைகளை புதுப்பிப்பது போன்றவற்றில், ஆலோசனைகள் பெறப்படும்.

