'வருமான வரி என்ற பெயரில் அடக்குமுறை பெருகி வருகிறது' இன்போசிஸ் முன்னாள் அதிகாரி காட்டம்
'வருமான வரி என்ற பெயரில் அடக்குமுறை பெருகி வருகிறது' இன்போசிஸ் முன்னாள் அதிகாரி காட்டம்
ADDED : ஏப் 10, 2025 12:25 AM

புதுடில்லி:வருமான வரி என்ற பெயரில் அடக்குமுறை அதிகரித்து வருவதாக, 'இன்போசிஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் காட்டமாக விமர்சித்து உள்ளார்.
டில்லியில் நடைபெற்ற 'ரைசிங் பாரத்' மாநாட்டின் ஒரு பகுதியாக, குழு கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது:
இன்று 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய், பிணக்குகளால் முடங்கி உள்ளது. 15 லட்சம் கோடி ரூபாய் நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் உள்ளது. இவற்றில், 80 --- 85 சதவீதம், கடந்த ஐந்து ஆண்டுகள் தொடர்பானவை. நாடு சுதந்திரம் பெற்ற பின், பிரிட்டிஷாரிடம் இருந்து அடக்குமுறையை கருப்பு ஏகாதிபத்தியம் எடுத்து கொண்டுவிட்டது.
கடந்த 2014ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரி பயங்கரவாதத்தை நிறுத்தப் போவதாக உறுதிமொழி அளித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 35 ஆண்டுகளில் எந்தவொரு நிதி அமைச்சரை விடவும், அதிக அதிகாரங்களை வரித்துறையினருக்கு அளித்து, நம் மீது அடக்குமுறையை செலுத்தினார்.
மத்திய அரசு, நேரடி வரி வருவாயாக கடந்த நான்கு ஆண்டுகளில், 75 லட்சம் கோடி ரூபாயை வசூலித்து உள்ளது. ஆனால், எவ்வளவு கருப்பு பணத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர்? கருப்பு பணத்தில் இருந்து எவ்வளவு வரி வசூலித்து உள்ளனர்? எட்டு ஆண்டுகளாக ஏஞ்சல் வரி உள்ளது. ஒவ்வொரு முறையும் அதற்கான சட்டத்தை மாற்றி, வரித்துறை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரத்தை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

