ADDED : ஏப் 17, 2025 12:12 AM

புதுடில்லி:தவிடுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என, எஸ்.இ.ஏ., சங்கம் வலியுறுத்தியுள்ளது. தவிடு, கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இதன் இருப்பு அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை முதல், தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த தடை, வரும் செப்டம்பர் மாதம் வரை தொடர்கிறது. இதனால், சுத்திகரிப்பாளர்களிடம் தவிடு இருப்பு அதிகரித்து வருகிறது. இது அரிசி ஆலை தொழில் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது.
உபரியாக உள்ள தவிட்டை ஏற்றுமதி செய்வது, இருப்பை விரைவாக குறைக்க உதவுவதோடு, சமையல் எண்ணெய் உற்பத்தியை பராமரிக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் அன்னிய செலாவணி வருவாயை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.