ADDED : ஆக 08, 2025 12:17 AM

புதுடில்லி:பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை நீக்குமாறு, அரசுக்கு ஐவுளி ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள சூழலில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து, ஐவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில், பங்கேற்ற ஐவுளித்துறையினர் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் ஐவுளி பொருட்களுக்கான தேவை ஏற்கனவே சரிந்து வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் தேவை 10 - 15 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐவுளித்துறையினர், கடன்களை திருப்பிச் செலுத்த இரண்டு ஆண்டு அவகாசம், மீண்டும் ஏற்றுமதி கடன் மீதான வட்டியை சமன்படுத்தும் திட்டம், மத்திய, மாநில அரசுகளின் வரிகள், தீர்வை தள்ளுபடியை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தல், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான வரிகளை தள்ளுபடி செய்தல் ஆகிய கோரிக்கையை முன்வைத்தோம்.
மேலும், பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை நீக்க வேண்டும். இதனால், மூலப்பொருட்கள் சர்வதேச சந்தை விலையில் கிடைக்க வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.