ADDED : பிப் 18, 2025 11:57 PM

புதுடில்லி:வங்கி டிபாசிட்களுக்கான காப்பீடு தொகையை, தற்போதுள்ள 5 லட்சம் ரூபாயிலிருந்து உயர்த்துவது தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வருவதாக, நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படும்போது, வாடிக்கையாளர்களின் டிபாசிட்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றை பாதுகாக்கும் விதமாக, காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் டி.ஐ.சி.ஜி.சி., எனும் 'டிபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' இதை வழங்கி வருகிறது.
சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மீதான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையைத் தொடர்ந்து, டிபாசிட் காப்பீட்டை உயர்த்துவது மீண்டும் பேசுபொருளாகிஉள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு, தொகையை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், முடிவெடுக்கப்பட்டதும் உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 1962ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் டிபாசிட் காப்பீடு திட்டத்தின் கீழ், காப்பீடு வரம்பு இதுவரை ஆறு முறை உயர்த்தப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இந்த வரம்பு, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.