அமைச்சர்களின் ஊதியத்திற்கு ரூ.620 கோடி ஒதுக்கீடு
அமைச்சர்களின் ஊதியத்திற்கு ரூ.620 கோடி ஒதுக்கீடு
UPDATED : பிப் 02, 2026 04:34 AM
ADDED : பிப் 02, 2026 01:56 AM

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ஆகியோரின் ஊதியத்துக்காக 2026 - 27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 620 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அமைச்சர்களின் செலவுகளுக்காக 620 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டில், இதற்காக 483 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிதி, மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் ஊதியம், படிகள், பயண செலவுகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
மேலும், முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு விமான சேவைகளுக்கான செலவும் இதில் அடங்கும்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு, 256 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, அந்த அமைப்பின் நிர்வாக செலவுகள் மற்றும் விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துக்கு 65 கோடி ரூபாய்; அமைச்சரவை செயலர் அலுவலகத்துக்கு 80 கோடி ரூபாய்; பிரதமர் அலுவலகத்துக்கு 73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு அரசு தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களின் வரவேற்பு செலவுகளுக்காக 5.76 கோடி ரூபாயும், முன்னாள் கவர்னர்களின் அலுவலக உதவிக்காக 1.53 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

