ஜவுளி துறையில் ரூ.95,000 கோடி முதலீடு; பிரதமரின் மித்ரா, பி.எல்.ஐ., திட்டங்களால் குவிய வாய்ப்பு
ஜவுளி துறையில் ரூ.95,000 கோடி முதலீடு; பிரதமரின் மித்ரா, பி.எல்.ஐ., திட்டங்களால் குவிய வாய்ப்பு
ADDED : அக் 22, 2024 10:18 AM

புதுடில்லி : பிரதமரின் மித்ரா மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களால், இந்திய ஜவுளித் துறையில், 95,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, டில்லியில், ஜவுளித் துறை செயலர் ரச்சனா ஷா கூறியதாவது: பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ் ஏழு இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தில், கைத்தொழிலில் தயாரிக்கப்படும் நுாலிழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புக்கு, ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 95,000 கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படவுள்ள ஏழு ஜவுளிப் பூங்காக்களில், தலா 10,000 கோடி ரூபாய் என்ற வீதத்தில், மொத்தம் 70,000 கோடி ரூபாயும்; உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டத்திலான தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் 25,000 கோடி ரூபாயும் முதலீடுகள் ஈர்க்கப்படும்.
இந்த இரண்டு வழிகள் மட்டுமின்றி, அன்னிய நேரடி முதலீடு வாயிலாகவும் ஜவுளித் துறைக்கு கூடுதல் முதலீடு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ், தமிழகத்தின் விருதுநகரில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.