ADDED : மார் 26, 2025 12:18 AM

புதுடில்லி:தொலைதொடர்பு கருவிகள் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, சாம்சங் நிறுவனத்துக்கு, 5,169 கோடி ரூபாய் அபராதத்தை இந்தியா விதித்துள்ளது.
தொலைதொடர்பு உபகரண இறக்குமதிக்கான வரியில், 10 முதல் 20 சதவீதம் வரி செலுத்த வேண்டியதை தவிர்க்க, தவறான தகவலை இந்திய சுங்கத் துறைக்கு அளித்து, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
4ஜி தொலைதொடர்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய பாகமான 'ரிமோட் ரேடியோ ஹெட்' எனும் உபகரணத்தை இறக்குமதி செய்து, ஜியோ நிறுவனத்துக்கு சாம்சங் விற்றுள்ளது. இதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
இதையடுத்து, சாம்சங் நிறுவனத்துக்கு வரி மற்றும் அபராதத் தொகையாக 4,472 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி ஏய்ப்பில், சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்ட ஏழு இந்திய நிர்வாகிகளுக்கும் 697 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 5,169 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் இந்திய சட்டதிட்டங்களுக்கு இணங்கி நடக்கும். நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.