ADDED : டிச 08, 2025 01:21 AM

புதுடில்லி: ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், சவுதி அரேபியா அதன் தயாரிப்புகளுக்கான விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாத நிலவரப்படி நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 37 சதவீதமாக உள்ளது. அதேபோல சமீப காலமாக அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது.
பாரம்பரியமாக இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் வினியோகஸ்தராக இருந்து வந்த சவுதி அரேபியா, பிற வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் விலையை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்ந்து தள்ளுபடி விலையில் கிடைப்பதும், அமெரிக்காவிலிருந்து கூடுதலாக இறக்குமதி செய்யத் துவங்கியுள்ள இந்தியாவின் முடிவும் சவுதி அரேபியாவை விலை குறைப்பை நோக்கி தள்ளியுள்ளன.
இதன் காரணமாக, வரும் ஜனவரி மாத கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 171 ரூபாய் வரை தள்ளுபடி வழங்க சவுதி அரேபிய அரசு நிறுவனமான 'அராம்கோ' முன்வந்துள்ளது. கடந்த 2023க்குப் பின் இதுவே அதிகபட்ச தள்ளுபடி.
* நம் நாட்டின் கச்சா எண்ணெய் சந்தை மதிப்பு 12.33 லட்சம் கோடி ரூபாய்
* ரஷ்ய யூரல் எண்ணெய் வகைகளுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 450 - 630 ரூபாய் வரை தள்ளுபடி
* இந்தியா, அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்சை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா 4ம் இடம்.

