ஜி.டி.பி., 6.30 சதவிகிதம் ஆக இருக்கும் என்கிறது எஸ்.பி.ஐ., கணிப்பு
ஜி.டி.பி., 6.30 சதவிகிதம் ஆக இருக்கும் என்கிறது எஸ்.பி.ஐ., கணிப்பு
ADDED : ஜன 09, 2025 01:47 AM

புதுடில்லி:வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.30 சதவீதமாக இருக்கக்கூடும் என, எஸ்.பி.ஐ., வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் முதலீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதற்கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில், வளர்ச்சி 6.40 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
அதிகபட்ச வளர்ச்சி அவ்வாறு இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனினும் 6.30 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வளர்ச்சி பதிவாகவே கூடுதல் வாய்ப்புள்ளதாக எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது. வழக்கமாகவே, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் வளர்ச்சி கணிப்புகளுக்கு இடையே 20 - 30 அடிப்படை புள்ளிகள் வித்தியாசம் இருக்கும் என்பது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேவையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், அரசின் நுகர்வு மற்றும் ஏற்றுமதி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதி பற்றாக்குறையை பொறுத்தவரை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.90 சதவீதமாக இருக்கும் என்ற அரசின் மதிப்பீட்டை ஒட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.