சிறுதொழில்களுக்கு நிலுவை அதிகாரிகளுக்கு சிப்காட் உத்தரவு
சிறுதொழில்களுக்கு நிலுவை அதிகாரிகளுக்கு சிப்காட் உத்தரவு
ADDED : மே 13, 2025 11:44 PM

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்த பொருட்களுக்கு, பெரிய நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் பணம் வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை, தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கும் பல பெரிய நிறுவனங்கள், அதற்கான பணத்தை குறித்த காலத்தில் தருவதில்லை என, புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், சிப்காட் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வழங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான பணம், 45 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். தாமதம் ஆனால், வங்கி வட்டி விகிதத்தை விட மூன்று மடங்கு வட்டியுடன் சேர்த்து நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும். பணம் கிடைக்காத நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., கவுன்சிலில் உதவி பெறலாம். அல்லது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகலாம்.
இவை, சரியான நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்வதையும், நிறுவனங்களின் நிதி நிலைமையையும் பாதுகாக்கின்றன. பெரிய நிறுவனங்கள் விதிமுறைப்படி நடக்கின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.