தர்மபுரியில் 'சிப்காட்' பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் துறை 'ஓகே'
தர்மபுரியில் 'சிப்காட்' பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் துறை 'ஓகே'
ADDED : நவ 12, 2024 09:01 AM

சென்னை : தர்மபுரி மாவட்டத்தில், 'சிப்காட்' நிறுவனம், 1,725 ஏக்கரில் அமைக்க உள்ள தொழில் பூங்காவுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழிற்சாலை அமைக்க ஏதுவாக, நிலங்களை மேம்படுத்தி, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்காவை உருவாக்கி வருகிறது. அங்குள்ள மனைகள் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள தர்மபுரியில், தொழிற்சாலைகளை துவங்க, தர்மபுரி தாலுகாவில் அதகபாடியில் தொழில் பூங்கா அமைக்கப் பட உள்ளது.
இதற்காக, அதகபாடி கிராமம் மற்றும் நல்லாம்பள்ளி தாலுகாவில் உள்ள அதியமான்கோட்டை, தடாங்கம், பாலஜங்கமன ஹல்லி ஆகிய கிராமங்களில், 1,725 ஏக்கரில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
அதில், தொழில் பூங்காவுக்கான உள்கட்டமைப்பு பணிகள், 462.63 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பூங்காவில் உள்ள மனைகள், மின்சார வாகன உதிரிபாகங்கள், பேட்டரி போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.
மொத்த ஏக்கரில், 1,009 ஏக்கர் தொழில் பூங்காவுக்கும், 30 ஏக்கர் குடிநீர், மின்சாரம் போன்ற பொது கட்டமைப்புக்கும், 5 ஏக்கர் திடக்கழிவு மேலாண்மை பணிக்கும், 121 ஏக்கர் சாலை, மழைநீர் வடிகால் பணிக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
மீதி, மரம் நடுதல் உள்ளிட்ட பசுமை பணிகளுக்கு பயன்படுத்தப் படும்.
அதகபாடி தொழில் பூங்காவுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு, தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து, பூங்கா உருவாக்கும் பணியை விரைவாக துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரியில் அமைக்கப்பட உள்ள முதல் தொழில் பூங்கா இதுவாகும்
கிட்டத்தட்ட 16,470 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்
மறைமுகமாக 1,830 நபருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
நிலம் வழங்குவோரின் குடும்பத்தினருக்கு, 10% வேலைவாய்ப்பு
பூங்காவில், 50 லட்சம் ரூபாயில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

