91,000 இளையோருக்கு பயிற்சி தர இதுவரை 193 நிறுவனங்கள் பதிவு
91,000 இளையோருக்கு பயிற்சி தர இதுவரை 193 நிறுவனங்கள் பதிவு
ADDED : அக் 13, 2024 02:59 AM

புதுடில்லி:முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும், 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்' திட்டத்தின் கீழ் இதுவரை, 193 நிறுவனங்கள் 90,800 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க பதிவு செய்துள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி இளம் வயதினருக்கு ஓராண்டுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை மற்றும் ஒருமுறை உதவித் தொகை 6,000 ரூபாயுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு, 18 முதல் 24 வயது வரை வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், படித்த, வேலைவாய்ப்பற்ற இளையோர் பதிவு செய்வது, நேற்று மாலை முதல் துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை, மாருதி, ரிலையன்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட 193 முன்னணி நிறுவனங்கள் மொத்தம் 90,800 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க பதிவு செய்துள்ளன.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான அதிகாரபூர்வ www.pminternship.mca.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதில் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, தாங்கள் அளித்த மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் வாயிலாக, வேலைவாய்ப்பு பயிற்சி குறித்த தகவல்கள் அனுப்பப்படும். 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா மற்றும் இளங்கலை வரை படித்தவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுநேர பணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது.