முதலீட்டு வாய்ப்பு குறித்து ஸ்ரீசிட்டியில் 'சிக்கி' ஆய்வு
முதலீட்டு வாய்ப்பு குறித்து ஸ்ரீசிட்டியில் 'சிக்கி' ஆய்வு
ADDED : ஜூலை 06, 2025 11:14 PM

சென்னை:ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து 'சிக்கி' எனும் எஸ்.ஐ.சி.சி.ஐ., பிரதிநிதிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு, எஸ்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் தென்னிந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபையின் 22 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு சென்றது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
இக்குழுவினருக்கு, பொருளாதார மண்டலத்தில் தொழில்முனைவோருக்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள், இருப்பிடம், முதலீட்டுக்கு ஏற்ப உள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஸ்ரீசிட்டி அதிகாரிகள் விளக்கியதுடன், 31 நாடுகளைச் சேர்ந்த 235 நிறுவனங்கள் செயல்படுவதையும் எடுத்துரைத்தனர்.
மேலும், ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் துவங்க முன்வருமாறு, தென்னிந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறையினருக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

