UPDATED : ஜன 13, 2024 11:52 AM
ADDED : ஜன 08, 2024 11:50 PM
சென்னை :“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, வரும், 28ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா செல்கிறது. பிறகு அவர், அமெரிக்கா செல்லவும் திட்டமிட்டுள்ளார். அங்கிருந்தும் ஒரு முக்கியமான முதலீடு வரும்” என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் ராஜா பேசியதாவது:கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.
அவர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வேலைகளை உருவாக்குவது முக்கியமானது என்பதில் தெளிவாக இருந்தார். தமிழகம் முழுதும் பரவலான வளர்ச்சியே அவரது இலக்கு. தொழில் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த அடித்தளம் அமைக்க துவங்கியது.'நான் முதல்வன், புதுமை பெண்' போன்ற திட்டங்களின் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின், நம் இளைஞர்களின் திறன் மேம்படுத்துவதை உறுதி செய்தார்.
இந்த புதிய முதலீடுகள், தமிழகத்திற்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.தமிழக உலக முதலீட்டாளர் மாநாடு, 2024ன், கடந்த இரண்டு அற்புத நாட்களும், தமிழகத்தின் தொழில்களுக்கான அடுத்த பெரிய பாய்ச்சலுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
பின், ராஜா அளித்த பேட்டி: முதலீடுகள் வாயிலாக, 14.54 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக சேர்த்து ஒட்டுமொத்தமாக, 26.90 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாநாட்டில் நடந்த கருத்தரங்குகள் வாயிலாக, பலரும் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். எனவே, வரும் வாரங்களில் மேலும் பல புதிய ஒப்பந்தங்கள் வரும். முதல்வர் ஸ்டாலின் வரும், 28ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்கிறார். அவருடன் ஒரு குழுவும் செல்கிறது. பின், அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அவர், அமெரிக்கா செல்லவும் திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து ஒரு முக்கியமான முதலீடு வரும் என்று நம்புகிறோம். இந்த முதலீட்டாளர் மாநாடு ஒரு துவக்கம் தான். தமிழகத்திற்கு பல முதலீடுகள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். மாநாட்டின் வாயிலாக மொத்தம், 632 ஒப்பந்தங்கள் வந்துள்ளன. டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலங்களில் மட்டும், 28,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட்டு, தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்நிறுவனங்களால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை ஓயக்கூடாது என, எங்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.