3 கோடி பேரின் தரவுகள் கசிந்தன அதிகாரியே விற்றதாக தகவல் ஸ்டார் ஹெல்த்
3 கோடி பேரின் தரவுகள் கசிந்தன அதிகாரியே விற்றதாக தகவல் ஸ்டார் ஹெல்த்
ADDED : அக் 10, 2024 09:53 PM

புதுடில்லி:'ஸ்டார் ஹெல்த்' காப்பீட்டு நிறுவனத்தின் மூன்று கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட்ட ஜென்சென் என்ற ஹேக்கர், இவற்றை ஸ்டார் ஹெல்த் நிறுவன உயரதிகாரி தன்னிடம் விற்றதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ஜேசன் பார்க்கர் என்பவர் 'ஜென்சென்' என்ற பெயரில், ஆன்லைனில் ஹேக்கிங் செய்பவராக உள்ளார். இந்தியாவின் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தின் 3.10 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை, அந்நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி தன்னிடம் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் பேரம் பேசிய அதிகாரி, முதலில் தகவல்களை விற்றதாகவும், பின்னர் இந்த ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை மாற்ற முயன்றதாகவும் பார்க்கர் தெரிவித்துள்ளார்.
தனி விபரங்களைத் தருவதற்கு முதலில் 24 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்ட நிலையில், பின்னர் அதை 1.25 கோடி ரூபாயாக உயர்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 3.10 கோடி வாடிக்கையாளர்களின் பான் கார்டு, மொபைல் எண், முழு முகவரி, முழு உடல் மருத்துவ நிலவரம் ஆகியவை வெளியிடப்பட்ட தகவல்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஸ்டார் ஹெல்த் நிறுவனம், இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்களைக் கொண்டு, தீவிர விசாரணை நடைபெறுவதாக கூறியுள்ளது.
சரியான நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியதாகவும்; ஹேக்கர் வெளியிட்ட விபரங்களை மூன்றாம் நபர் யாரும் தொடர்பு கொள்ள இயலாதபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தெரிவித்து உள்ளது.
மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்களின் மொபைல் நம்பர்கள், பான் கார்டு விபரங்கள் வெளியானதால், மோசடி நடப்பதற்கான ஆபத்து அதிகரித்து உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் அச்சம் எழுந்துள்ளது.

