தரச்சான்று இல்லாத ஹெல்மெட் விற்பனை தடுக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
தரச்சான்று இல்லாத ஹெல்மெட் விற்பனை தடுக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2025 11:13 PM

புதுடில்லி:பி.ஐ.எஸ்., தரச்சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இந்திய சாலைகளில் பயணிக்கும் 21 கோடி இருசக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு முக்கியமானது. மோட்டார் வாகன சட்டம், 1988ன்படி ஹெல்மெட் அணிவது கட்டாயம்.
தரமற்ற ஹெல்மெட்டுகளால், பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, அதன் நோக்கம் தோல்விஅடைகிறது.
விழிப்புணர்வு தே வை
இதனை கருத்தில் கொண்டு, கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் கீழ் ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, உரிய பி.ஐ.எஸ்., தரச்சான்றிதழ் இன்றி, ஹெல்மெட்விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்க வேண்டும்.
போலி முத்திரை
நுகர்வோரை ஆபத்தில் தள்ளும் பல்வேறு ஹெல்மெட்டுகள், குறிப்பாக சாலையோரங்களில் விற்கப்படும் பி.ஐ.எஸ்., முத்திரை இல்லாத ஹெல்மெட், போலி முத்திரை கொண்டவை குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
கடந்த ஜூன் நிலவரப்படி, நாடு முழுதும் 176 ஹெல்மெட் தயாரிப்பாளர்கள், பாதுகாப்பான ஹெல்மெட் தயாரிப்புக்கான பி.ஐ.எஸ்., உரிமம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஐ.எஸ்., கேர் செயலி, பி.ஐ.எஸ்., போர்ட்டல் வாயிலாக ஹெல்மெட் தயாரிப்பாளரின் உரிமத்தை பார்க்கலாம்