UPDATED : நவ 10, 2026 04:35 PM
ADDED : நவ 10, 2026 04:31 PM

ஆந்திராவில் சிறு தொழில்களுக்கு மின்சார சிக்கனம்
ஆந்திராவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்சாரம், தண்ணீர் பயன்பாட்டை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து மாநில தொழில் துறை முதன்மை செயலர் என்.யுவராஜ் தலைமையில் காணொலி வாயிலாக ஆய்வு கூட்டம் நடந்தது. தொழிற்சாலைகளில் மின்சாரம், தண்ணீர் வீணாவதை தடுக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு யுவராஜ் அறிவுறுத்தினார்.
சத்தீஸ்கரில் 15 லட்சம் சிறு தொழில்களுக்கு பலன்
சத்தீஸ்கரில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்கும் புதிய சட்டத்தால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.புதிய சட்டத்தின் மூலம் தேவையற்ற ஆய்வுகள், மீண்டும் மீண்டும் பெற வேண்டிய அனுமதிகள் குறைக்கப்படும். குறைந்த ஆபத்துள்ள தொழில்கள் தங்கள் விவரங்களை தாங்களே உறுதி செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.கடந்த 2023 டிசம்பர் முதல் தொழில் தொடங்குவதை எளிதாக்க 450க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும் என முதல்வர் கூறினார்.
சூரத் ஜவுளி நிறுவனங்களுக்கு ஹரியானா அழைப்பு
குஜராத்தின் சூரத், ஆமதாபாத் நகரங்களில் உள்ள ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை, ஹரியானாவில் புதிய ஆலைகள் அமைக்க அம்மாநில அரசு அழைத்துள்ளது.
குருகிராம் அருகே சோஹ்னாவில் உள்ள 1,600 ஏக்கர் தொழில் நகரில் முதலீடு செய்ய, ஹரியானா தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
சூரத்தில் இருந்து துணி மற்றும் மூலப்பொருட்களை பெற்று, ஹரியானாவில் ஆடைகளை தயாரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டில்லி மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் உள்ள பெரிய விற்பனை சந்தையையும் ஏற்றுமதி வாய்ப்புகளையும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.
