'சிட்கோ' தொழில் மனை கட்டணம் 15 சதவிகிதம் வரை உயர்வால் கடும் அதிருப்தி
'சிட்கோ' தொழில் மனை கட்டணம் 15 சதவிகிதம் வரை உயர்வால் கடும் அதிருப்தி
ADDED : ஏப் 27, 2025 01:23 AM

சென்னை:தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனத்தின் தொழில் மனைகளுக்கான கட்டணம், 20 சதவீதம் முதல், 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல், விற்பனை பத்திரம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, தொழில்முனைவோரிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது. இந்நிறுவனம் மாநிலம் முழுதும், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகிக்கிறது.
அங்குள்ள மனைகளுக்கான கட்டணம் வரும் நிதியாண்டிற்கு, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தொழில் மனை ஒதுக்கீடு செய்வதற்கான விற்பனை பத்திரம் உள்ளிட்ட கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கு, தொழில்முனைவோரிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது:
கிண்டி தொழிற்பேட்டையில் ஏக்கர் தொழில்மனைகள், 61.41 கோடி ரூபாயாகவும், அம்பத்துார் தொழிற்பேட்டையில், 56.42 கோடி ரூபாயாகவும், காஞ்சிபுரம் திருமுடிவாக்கத்தில், 12.13 கோடி ரூபாயாகவும், திருவள்ளூர் திருமழிசையில், 12.65 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல், மாநிலம் முழுதும் உள்ள தொழிற்பேட்டைகளில் மனைகளின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும் முன்பு இருந்ததை விட கூடுதலாக, 10 லட்சம் ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
விற்பனை பத்திர அனுமதிக்கான செயலாக்க கட்டணம், 14,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தொழில் நடத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்குவோர், தங்களின் மனையை விற்கும் போது, 50,000 ரூபாயையும் மனையை வாங்குவோர், 1 லட்சம் ரூபாயையும் சிட்கோவுக்கு செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியதால் மனையை விற்பவரிடம் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம். மனைக்கான விண்ணப்ப கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும், டிபாசிட் கட்டணம், 14,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுஉள்ளது.
ஏற்கனவே, தொழிலில் சவால்களை சந்தித்து வரும் சிறு, குறு நிறுவனங்களுக்கு, சிட்கோ கட்டண உயர்வு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு கூறினார்.