எத்தனால் விலையை உயர்த்த வேண்டும் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை
எத்தனால் விலையை உயர்த்த வேண்டும் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை
ADDED : நவ 06, 2024 01:31 AM

புதுடில்லி:சர்க்கரை ஆலைகளை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற, மத்திய அரசு, எத்தனால் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைவர் பிரபாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
சர்க்கரை விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் உற்பத்தி வருவாய் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
கரும்பை சர்க்கரையாக மாற்றும் பணி, கடந்த மாதம் 15ம் தேதியே துவங்கியிருக்க வேண்டிய நிலையில், தற்போது வரை துவங்காமல் இருப்பதால், சர்க்கரை விலை குறைந்து வருகிறது.
நவம்பர் 15ம் தேதி இந்த பணி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இது மேலும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேவையை விட கூடுதலாக சர்க்கரை இருப்பு உள்ளதும், விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.
கடந்தாண்டு ஒரு கிலோ சர்க்கரையின் சராசரி விலை 38 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டு இது 35.50 ரூபாயாக குறைந்துள்ளது.
இதனை கருத்தில்கொண்டு, தற்போது 31 ரூபாயாக உள்ள சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 39.14 ரூபாயாக அரசு உயர்த்த வேண்டும்.
உள்ளீட்டு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
கரும்புக்கான சந்தை விலை எப்படி இருந்தாலும், அரசு நிர்ணயித்துள்ள விலையிலேயே ஆலைகள் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டியுள்ளன.
இதையடுத்து, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், கரும்புக்கான எப்.ஆர்.பி., எனும் நியாயமான மற்றும் லாபகரமான விலை ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளையில் சர்க்கரை விலை, இரண்டு ரூபாய் குறைந்துள்ளது. இவை அனைத்தும், சர்க்கரை ஆலைகளின் நிதிச்சுமையை அதிகரிக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.