ADDED : மே 20, 2025 06:41 AM

புதுடில்லி : வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள், கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாய் நிலுவையை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய, ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவையில் 45,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்யக்கோரி, வோடபோன் ஐடியா இம்மாத துவக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வட்டி, அபராதம், அபராதத்துக்கு விதிக்கப்பட்ட வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியது.
கிட்டத்தட்ட 39,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவையை அரசு பங்குகளாக மாற்றிக் கொண்டதாகவும், இருப்பினும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் மற்றும் ஏ.ஜி.ஆர்., நிலுவை என இன்னும் 1.19 லட்சம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது.
அதேபோல பார்தி ஏர்டெல் நிறுவனமும், 34,745 கோடி ரூபாய் நிலுவையை தள்ளுபடி செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இவை அதிர்ச்சி அளிப்பதாகவும், தவறாக புரிந்து கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி தள்ளுபடி செய்தது. எனினும், மத்திய அரசு, நிறுவனங்களுக்கு உதவ முன்வந்தால் நீதிமன்றம் அதை தடுக்காது என்றும் தெரிவித்தது.
பங்கு விலை 8% சரிவு
உச்ச நீதிமன்றம் வோடபோன் ஐடியாவின் மனுவை தள்ளுபடி செய்த தகவல் வெளியானதையடுத்து, நேற்று வர்த்தக நேரத்தின் இடையே நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 8.41 சதவீதம் சரிந்து, 6.75 ரூபாயாக இருந்தது. இந்த சரிவால் நிறுவனம் அதன் சந்தை மதிப்பில் 6,900 கோடி ரூபாயை இழந்தது.