ஜி.எஸ்.டி., பதிவை எளிதாக்க 'சுவிதா கேந்திரா' மையங்கள்
ஜி.எஸ்.டி., பதிவை எளிதாக்க 'சுவிதா கேந்திரா' மையங்கள்
ADDED : பிப் 07, 2025 12:42 AM

திருப்பூர்:புதிய ஜி.எஸ்.டி., பதிவை எளிமைப்படுத்தும் வகையில், தமிழகம் முழுதும் 41 வணிக வரி அலுவலகங்களில், 'சுவிதா கேந்திரா' சேவை மையங்கள் அமைய உள்ளன.
ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகமும்; 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேவை அளிப்போரும், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும்.
நிறுவன உரிமையாளர், பங்குதாரர்கள், தங்கள் சுய விபரங்கள் மற்றும் நிறுவன விபர ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்காக விண்ணப்பிக்கின்றனர்.
ஆதார் சரிபார்ப்பு சிக்கல்
ஆதாருடன், தனிநபர் பயோ மெட்ரிக் உட்பட அனைத்து விபரங்களும் இணைக்கப்பட்டுஉள்ளன.
புதிய பதிவின் இறுதி யில், வர்த்தகரின் ஜி.எஸ்.டி., கணக்கில், ஆதார் சரிபார்ப்பு வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, ஆதார் சரிபார்ப்பில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால், புதிய ஜி.எஸ்.டி., பதிவில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சிலின் உத்தரவுப்படி, வணிக வரித்துறை அலுவலகங்களில், சுவிதா கேந்திரா சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வணிக வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சில வர்த்தகர்கள், வேறு நபர்களின் ஆதார், பான் கார்டுகளை பயன்படுத்தி, போலி ஜி.எஸ்.டி.,யை பதிவு செய்து விடுகின்றனர். வரி ஏய்ப்பு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
வரி ஏய்ப்பு தடுப்புக்காக...
சுவிதா கேந்திராவில், வர்த்தகரின் கை ரேகை, கண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விபரங்கள் வாயிலாக ஆதார் சரிபார்க்கப்படும் என்பதால், போலி பதிவுகள் தடுக்கப்படும்.
திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:
ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்கும்போது, வர்த்தகரின் ஆதார், பான் மற்றும் இணைக்கப்படும் இதர ஆவணங்களுக்கிடையே சிறிய முரண்பாடுகள் இருந்தாலும், சரிபார்ப்பு முழுமை பெறாது.
காலதாமதம் தவிர்ப்பு
இத்தகைய சூழலில், வணிக வரி அல்லது மத்திய ஜி.எஸ்.டி., ஆய்வாளர்கள், வணிக இடத்தை நேரில் கள ஆய்வு செய்த பின்னரே, ஆதார் சரிபார்ப்பு பூர்த்தி செய்யப்படுகிறது.
பல படிநிலைகளை கொண்ட இந்த நடைமுறை யில், புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு காலதாமதம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க இந்த மையங்கள் உதவும். இவற்றுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கான ஆதார் சரிபார்ப்பு மற்றும் அங்கீகாரத்துக்காக மட்டுமே இம்மையம் இயங்கும்.
ஆன்லைன் பதிவின்போது சிக்கல் ஏற்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர்கள், சுவிதா கேந்திரா சேவை மையத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

